rajsekar


குருதிக்கொடை வள்ளல் 


பி.ஏ.கே.ராஜ்சேகரன், 


கிட்டதட்ட 202 முறை ரத்த தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர்,   பி.ஏ.கே.பி.ராஜ்சேகரன், தனது சாதனையை  தானே முறியடிக்க அடுத்த சாதனை படைத்த  முயற்சித்தநேரத்தில் ,  கடந்த 1 ம்தேதி  தனது 71 வயதில்   காலமானார். வடசென்னையில் உள்ள சமூக நல அமைப்புகள், ரத்த தானத்தில் சிறந்து விளங்கும் இயக்கங்கள்  சுற்றுப்புறத்தில் உள்ள மருத்துவமனைகள் அனைத்திலும் இவரது பெயர் பிரசித்தம்,   


இவரது தந்தை, பி.ஏ.கே.பழனிசாமி, 1938 முதல் உயிர் பிரியும் வரை திராவிடர் கழகத்தில் வலம் வந்தவர், வடசென்னை வட்டாரத்தில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் பகுத்தறிவு முழக்கமிட்டவர்,  அந்த காலத்தில் மோட்டார் சைக்கிள் வைத்திருந்த வெகுசிலரில் பழனிசாமியும் ஒருவர், எனவே திராவிடர் கழகத்தின் மூலம் அறிமுகமாகியிருந்த நடிகர் சிவாஜிகணேசனை அழைத்து கொண்டு, அவருக்காக  கம்பெனி கம்பெனியாக சென்று  சினிமா சான்ஸ்க்கு முற்றுகையிட்டவர், அதனாலேயே நடிகர் திலகத்தால் மோட்டார் சைக்கிள் என்று அன்பாக அழைக்கப்பட்டார் . சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டனில் இப்போது இருக்கும் அவரது வீட்டில்   தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும்  அடிக்கடி வந்து அளவளாவி இருக்கின்றனர், 


மூடபழக்கங்களில் மூழ்கி கிடந்த காலகட்டத்திலேயே தனது சகோதரிக்கு ராகுகாலத்தில் மறுமணம் செய்து  வைத்து  புரட்சி செய்தவர் பி.ஏ.கே.பழனிசாமி, அந்த புரட்சியில் முகிழ்த்த சகோதரி, வடசென்னையில் புகழ் பெற்ற டாக்டராக இருந்து மறைந்தவர்.. சாகும் வரைக்கும் பி.ஏ.கே.பழனிசாமி கொடையுள்ளம் படைத்தவராகவே இருந்தார், அவரது கொடை உள்ளத்திற்கு சான்று, வண்ணாரப்பேட்டையில் உள்ள பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப்பள்ளிக்கு அவர் அளித்த நிலம். கிட்டதட்ட 52 கிரவுண்ட் பரப்பளவிலான அந்த பள்ளியில் வடசென்னையில் மிக உயரிய கல்விச்சேவை செய்து வருகிறது, சென்னையில் உள்ள பல்வேறு புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் இல்லாத மிக உயர்ந்த கல்வித்தரத்தை இந்த பள்ளியில் காணலாம், இந்த பகுதியில் கிட்டதட்ட பல லட்சம் மாணவர்களை உயர்ந்த தரத்தில் உருவாக்கிய பள்ளி. இது ,   நிலம் தந்த பழனிசாமி பெயரை அதை நன்றியோடு பெற்று கொண்ட நாடார் சமூகத்தினர், பள்ளிக்கு அவரது பெயரை அன்பாக சூட்டினர்,பள்ளிக்கு தனது பெயரை ஏற்காத பழனிசாமி, அதற்காக தான் சாகும் வரைக்கும் அந்த பள்ளிக்கு ஆண்டுதோறும் ரூ 10 ஆயிரம் வரை நன்கொடையாக வழங்கினார், 


இப்படியொரு கொடை உள்ளம் படைத்தவரின் மகன் தான் பி.ஏ.கே.பி.ராஜ்சேகரன், அவருக்கு பகுத்தறிவு இயக்கத்தின் தொண்டரான  பழனிசாமி வைத்த பெயர் ஸ்டாலின் என்பது , ஆனால் ஏனோ அந்த பெயரை ராஜ்சேகரன் என்று மாற்றிக்கொண்டார்,  ஆனால் தந்தை பழனிசாமியின் கொடை உள்ளத்தை மகன் மாற்றிக்கொள்ளவில்லை,. சமூக நல இயக்கங்கள் எங்கு எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அங்கே அவர் பெயர் இருக்கும்,  அவர்கள் ரத்த தான முகாம்கள் நடத்தினால் ராஜ்சேகரனும் இருப்பார். இப்படி ராஜ்சேகரன் கிட்டதட்ட 202  முறை ரத்த தானம் செய்திருக்கிறார் அவரது மகள் திருமதி அனிதா, தந்தையோடு கிட்டதட்ட 40 முறைக்கும் மேலாக ரத்த தானம் செய்துள்ளார். 


ராஜ்சேகரன் ரத்த தானத்தோடு படைப்பாளிகளையும் நேசிக்கும் மனிதர். வடசென்னையில் உள்ள நுாலகங்கள் சிலவற்றில் இவரது கொடை உள்ளம் ஆங்காங்கே பொறிக்கப்பட்டிருக்கும் புரவலர் என்ற பெயரில் . ஒவ்வொரு நுாலகத்திலும் அவர் பெயரோடு அவர் மனைவி திருமதி மஞ்சுளா ராஜ்சேகரனின் பெயரும் இடம் பெற்றிருக்கும் . இந்த மாபெரும் மனிதருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சியை அண்மையில் ராயபுரம் ரவுண்டப் என்ற வாட்ஸ் குழு , வடசென்னை தமிழ் இளைஞர் பேரவை, நண்பர்கள் நகர நல அமைப்பு, தமிழ்நாடு நேதாஜி சமூக சேவை இயக்கம்,  ஆகியவற்றோடு இணைந்து நடத்தியது, இந்த கூட்டத்தில் குருதி கொடை வள்ளல் பி.ஏ.கே.பி.ராஜசேகரனின் சேவையை போற்றும் வகையில் அவரது மறைவுக்கு தமிழக சட்டபேரவை இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது,


இது குறித்து ஏற்கனவே பேரவை உறுப்பினர்களும் சட்டபேரவை தலைவரும் அத்தீர்மானத்தை நிறைவேற்றி ராஜ்சேகரனின் புகழுக்கு புகழ் சேர்த்தனர்,