வாடகை மறுத்தவரை கொரோனா
கொண்டு சென்ற கொடுமை
வடசென்னை சீரங்கம்மாள் தெருவில் மனைவி ராஜம்மாள் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர், அக்பர் தனசேகரன் . 72 வயதான அக்பர், தனது இளம்பிராயத்தில் நடிகர் சிவாஜிகணேசனின் நாடகங்களுக்கெல்லாம் மேடை அமைத்து கொடுத்திருக்கிறார், அவரே கூட நாடகங்களில் நடித்திருக்கிறார், அக்பர் வேடத்தில் ஒரு நாடகத்தில் நடித்ததன் காரணமாக அவருடைய பெயருடன் அக்பர் சேர்ந்தது,அதன் பின்னர் சிவில் சப்ளை கார்ப்பரேஷனில் வேலை முதலில் சூப்பரெண்ட், அடுத்தது உதவிக்கமிஷனர் பின்னர், கடைசியாக சென்னை மண்டல உணவு வழங்கல் மற்றும் நுகர்பொருள் துணைக்கமிஷனர் 2003 ஆம் ஆண்டு ஓய்வு எந்த நிலையிலும் நேர்மை தவறாத அதிகாரி என்பதால் உணவு பொருள் வழங்கல் துறையில் அக்பர் தனசேகரனுக்கு அவ்வளவு நல்ல பெயர்.
பெருந்தலைவர் காமராஜரின் தொண்டர் என்பதில் பெருமை கொள்ளும் தனசேகரனுக்கு ஓய்வு பெற்ற பின்னரும் தொண்டுள்ளம் விடவில்லை, அவ்வப்போது பெருந்தலைவரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் ஏழை எளியவர்களை தேடி பிடித்து உதவும் குணம் . மாணவர்களுக்கு உடையானாலும் கல்விக்கட்டணமானாலும் முன் நின்று உதவுவார் சென்னையில் நேர்மையான காங்கிரசார் பலருக்கு இவர் தான் அரசியல் ஞானகுரு, ஓய்வு பெற்று 17 வருடங்களானாலும் அரசியலில் அவருக்கு அந்தளவுக்கு நாட்டமில்லை:
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தாண்டவம் தொடங்கியபோது, தனது சிறு மளிகை கடைக்கு வரும் மக்களிடம் முகக்கவசம் அணிய சொல்லி வலியுறுத்துவார், இல்லையென்றால்இலவசமாகவே வழங்குவார், மார்ச் மாதத்தை கொரோனா ஊரடங்கு தாண்டிய போது பலரும் வேலைவாய்ப்பில்லாமல் தவித்தனர், வீட்டில் பட்டினி தாண்டவமாடியது. தனக்கு சொந்தமான வீடுகளில் வசித்த இருபது பேர் வாடகை கொடுக்க முடியாமல் தவித்தபோது, வாடகையை கொண்டுவந்து கொடுத்த போதும் வாங்க மறுத்தார், கிட்டதட்ட 2 லட்சத்திற்கு மேல் வாடகையாக வரும் வருமானத்தை நொடியில் விட்டு கொடுத்து மனிதாபிமானத்தில் மகிழ்ந்த மனிதர்,அந்த குடும்பங்கள் பட்டினி கிடக்கிறது என்ற தகவல் அறிந்து வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் 25 கிலோ அரிசியை தேடி வந்து கொடுத்தவர் இப்போது இல்லை. அவரையும் கொரோனா கொண்டு சென்று விட்டது, கடந்த புதன் கிழமை வரை மகன் பாபுவுடன் வீடியோ காலில் தைரியம் சொல்லி கொண்டிருந்தார், நானும் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவேன்னு அம்மா கிட்ட சொல்லு கவலையே வேண்டாம் என்றவர், குடும்பத்தினர் அனைவரையும் கவலையில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டார்,
காவேரி மருத்துவமனையில் தான் அந்த டெஸ்ட் நடந்து பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தது, அதுவும் கரெக்டா நுரையீரலில் கொரோனா நுண்கிருமி நுழைந்து விட்டது, டாக்டர்கள் எவ்வளவோ போராடி பார்த்தனர் முடியவில்லை. கடைசியாக வியாழக்கிழமை மாலையில் கைவிட்டு விட்டனர், அப்பாவும் எங்களை கைவிட்டு விட்டார், இனி எல்லாம் முடிந்தது, அப்பாவின் முகத்தை பார்க்க முடியாது என்றிருந்தோம் .தனியார் மருத்துவமனை என்பதால் அதை தான் பார்க்க முடிந்தது, கடைசியில் ஆயிரம் விளக்கு பகுதியிலேயே அடக்கம் செய்து விடுங்கள் என்று காவல்துறையினர் சொன்னார்கள், அதுவும் ஒரே ஒருவர் தான் வர முடியும் என்றார்கள், நாங்கள் எவ்வளவோ பேசி மூன்று பேருக்கு அனுமதி பெற்றோம்,ஆயிரம் விளக்கு என்றார்கள், பேசி பேசி காசிமேட்டுக்கு கொண்டு வந்தோம், காலையில் என்றார்கள், மாலையில் தான் முடிந்தது, இது தான் எங்களால் முடிந்தது என்று கண்ணீர் மல்கினார், பாபு