ஜல்லிக்கட்டை போல நீட் தேர்வுக்கு விலக்களிக்க அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்
இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில அரசே சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு என்று நாடாளுமன்றத்தின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறையின் 9 2 வது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் , 2 ம்தேதி மாடல் டெண்டல் காலேஜ் குறித்த வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நீட் போன்ற மருத்துவ தேர்வு குறித்து மாநில அரசுகளுக்கு மாறுபட்ட கருத்து இருக்குமானால் அரசியல் சட்டப்பிரிவு 254 பிரிவின் கீழ் சுமுக தீர்வை ஏற்படுத்தி கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது, ஒரு மாநிலத்தில் அசமந்த சூழ்நிலை கல்வியில் ஏற்படுமானால் அது குறித்து மாநில அரசு தான் தீர்மானிக்க வேண்டும், அது குறித்து மாநில அரசுக்கு சட்டம் இயற்றுகிற அதிகாரம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கிறது,
இதன் அடிப்படையில் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வுக்கு எதிராக வலுவான தனி சட்டத்தை கொண்டு வருவேன் என்று கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் திட்டவட்டமாக அறிவித்தார் அதனை நம்பி தான் தமிழக மக்களும் வாக்களித்தார்கள் நீட் தேர்வை முன் வைத்து ஜெயலலிதா பிரசாரம் செய்த அந்த தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது, எனவே மக்கள் தான் இறுதி இறையாண்மை படைத்தவர்கள், நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் வாக்களித்தார்கள், எனவே 5 வருடங்களுக்கு நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும்,
அரசமைப்பு சட்டம் நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கை மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக சட்டமன்றத்தை மீண்டும் கூட்டி நீட் தேர்வில் இருந்து விலக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும்,
ஜல்லிக்கட்டு போன்ற அவசர சட்டத்தை நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கவும் கொண்டு வரவேண்டும், இதற்கு தமிழக அரசுக்கு முழு அதிகாரமும் உரிமையும் இருக்கிறது,அது குறித்துஇதுவரை விவாதிக்கப்படவில்லை. விரைவில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீதிபதிகள் சிலருடைய கருத்துக்களையும் இணைத்து முதல்வருக்கு மனு அனுப்பியிருக்கிறேன் எனறு கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்,