காமராஜர் படத்திற்கு கிழே வைரவரிகள்

எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது, காமராஜர் படத்திறப்பு குறித்து கருணாநிதியை தனியறைக்கு அழைத்தார், பெருந்தலைவரின் படத்திற்கு கிழே வைரவரிகளை எழுத வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார், இது குறித்து திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதம் 


 


ஜூலை 15 - உலக நாட்காட்டிகள் அனைத்திலுமே இந்தத் தேதி இருக்கும் என்றாலும், தமிழகத்திற்கு இந்த நாளுக்கென தனியானதொரு  சிறப்பு உண்டு. ஆம்.. கல்வி வளர்ச்சி நாளாகத் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்திலும் கொண்டாடப்படும் இந்த நன்னாள்தான் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளாகும். தமிழக அரசியல் வரலாற்றில், தனி முத்திரை பதித்த முதல்வராக, 9 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து, இந்திய அரசியலுக்கும் அதுவரை இல்லாத புதிய வழிகாட்டியாகத்  திகழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர்; அவர் தந்த கே.பிளான் -  துணைக்கண்ட அரசியலில் தொலைநோக்கான தூய அத்தியாயம். திராவிட இயக்கத்துக்கும், காங்கிரஸ் பேரியக்கத்துக்கும்  சமூக - அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் இருந்தபோதும், மேடைகளில் கடுமையான விமர்சனங்கள் மாறி மாறி வைக்கப்பட்டபோதும்,  காமராஜரை தந்தை பெரியார் ‘பச்சைத்தமிழர்’ என்று அழைத்தார்; பேரறிஞர் அண்ணாவோ , “குணாளா.. குலக்கொழுந்தே..” என்றே கொண்டாடி எழுதினார்.  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது சட்டமன்ற அனுபவங்கள் குறித்த பேட்டியில், தமிழகத்தின் ‘சிறப்பான முதல்வர்’ என்று காமராஜரைக் குறிப்பிட்டிருக்கிறார்.


எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டமன்றத்தில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படம் திறக்கப்பட்ட வேளையில், முதல்வர் எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி தனது அறைக்குத் தனியாக அழைத்து, பெருந்தலைவரின் படத்திற்குக் கீழே எழுதுவதற்குப் பொருத்தமான  வாசகத்தைக் கேட்ட நிலையில், ‘உழைப்பே உயர்வு தரும்’ என்று  கருணாநிதி  அந்தக் கணமே எழுதிக் கொடுத்து, கர்மயோகி காமராஜருக்குப் பெருமை சேர்த்தார்.


திமுக ஆட்சி அமைத்த காலங்களில் எல்லாம் காமராஜரை பெருமைப்படுத்தும் வகையில் கருணாநிதி சிறப்புகளைச் செய்தபடியே இருந்தார். 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில்,  ஐந்தாம் முறை தமிழக முதல்வராக ஆட்சி செய்த கலைஞர் மாணவர்களுக்கு மதிய உணவுடன் இலவசக் கல்வி தந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளினை தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள்தோறும் கல்வி வளர்ச்சி நாளாக எல்லாக் காலங்களிலும்  கொண்டாட வேண்டும் என்பதற்காகச் சட்டமியற்றி, அதனை நடைமுறைப்படுத்தி, ஆண்டுதோறும் ஜூலை 15 அன்று கல்வி வளர்ச்சி நாளாகக் கடைப்பிடிக்கச் செய்தார். ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோதும் இன்றளவும் அந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.– கருணாநிதியின் மரியாதைக்குரிய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளாம் ஜூலை 15 அன்று, அண்ணா அறிவாலயத்தில் பெருந்தலைவரின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்படவிருக்கிறது. \கருணாநிதி காட்டிய வழியில் ஜூலை 15-ம் நாளினை, கல்வி வளர்ச்சி நாளாகக் கடைப்பிடித்து, பெருந்தலைவர் பெருமைகளை  இன்றைய தலைமுறை அறியப் பேசுவோம்; ஏற்றிப் போற்றுவோம்!