சமூக வலைதளங்களில் இந்து விரோதி என்று சொன்னால் எதிர்வினையாற்றாதீர்கள் நகைச்சுவை துணுக்குகளாக நினைத்து புறந்தள்ளுங்கள் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியினருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் எழுதியிருப்பதாவது:
திருவாரூர் கோவில் தேரோட்டம், மயிலாப்பூர் கோவில் தெப்பக்குளம் தூர்வாருதல் எனத் தொடங்கி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலின் திருப்பணியிலும் கவனம் செலுத்தி, கவனிப்பாரற்று இருந்த கோவில்களிலும் ஒரு காலப் பூசையேனும் நடந்திட வழிவகுத்தது திமுக ஆட்சி , முன்னா்ள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியில் . கிராமப்பூசாரிகள் நலனுக்காக வாரியம் அமைக்கப்பட்டது. தமிழ் வழிபாட்டு முறைக்கு முன்னுரிமை தரப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆண்டவன் சன்னதியில் அனைவரும் சமம் என்கிற அடிப்படையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் கொண்டு வரப்பட்டது.இப்படி எடுத்துச் சொல்ல எத்தனையோ இருக்கின்ற நிலையில், நம்மை நோக்கி ‘இந்து விரோதிகள்’ என்று விமர்சனத்தை வைத்து, வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் என அரதப்பழசான சிந்தனையை புதிய தொழில்நுட்பங்களின் வழியே புத்தம் புதிய காப்பியாக ரிலீஸ் செய்து பார்க்கிறார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்துக்கள் - கிறிஸ்தவர்கள் என எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைத்திடப் போராடுகிறது நமது இயக்கம். அதில் உயிர்பறிக்கப்பட்ட இந்துக்களைக் கொச்சைப்படுத்தியவர்கள்தான் நம்மை இந்து விரோதி என்று திசை திருப்பிடப் பார்க்கிறார்கள்.. எங்கோ - எதுவோ ஒன்று நடந்தாலும் அதனைத் தொடர்புபடுத்தி தி.மு.க மீது பழிசுமத்திட சில அரைவேக்காடுகளை ஆள்பிடித்து வைத்திருக்கிறார்கள். மாநிலத்தை ஆளும் ஆட்சியாளர்கள், தி.மு.க.,வை தமிழர்களின் எதிரியாக சித்தரிக்க நினைக்கும் திடீர் அரசியல் நகைச்சுவையாளர்கள் என அவர்களின் கூட்டத்தில் எடுபிடிகள் ஏவல்செய்வோர் ஏராளமாக இருக்கிறார்கள். இந்தச் சமூக வலைதள யுகத்தில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் கருத்துகள் எளிதில் சென்று சேர்வதால் அதனை கவனிக்கக்கூடிய திமுகவினர் சிலர் உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றும் போக்குத் தெரிகிறது. அதனைக் கைவிடுங்கள். நகைச்சுவைத் துணுக்குகளாக நினைத்துப் புறந்தள்ளுங்கள்.என்று அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்,