திறமையை பரிசோதித்துப் பார்த்து, அதில் அன்புமணி தேர்ச்சி பெற்றால் முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரை செய்யுங்கள் என்று ஊடகங்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஊடகங்களுக்கு எழுதியுள்ள கடிதம் வருமாறு: .இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டை காங்கிரஸ் கட்சி 20 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. 1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை 5 தேர்தல்களில் வெற்றி பெற்று 22 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. அதிமுக 1977-ஆம் ஆண்டு முதல் இன்று வரை 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று 30-ஆவது ஆண்டாக ஆட்சிப் பொறுப்பில் தொடர்கிறது. அத்தனை ஆண்டுகால ஆட்சிகளில் செயல்படுத்தப்பட்டதை விட சிறப்பான திட்டங்களை மருத்துவர் அன்புமணி பொதுவெளியில் முன்வைத்த நிலையில், அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்து பார்க்கலாம் என்று மக்களுக்கு ஊடகங்கள் பரிந்துரைத்திருக்க வேண்டும். ஊடகங்களுக்கு அந்தக் கடமை உள்ளது.
அன்புமணியை கருணை அடிப்படையிலோ, வேறு அடிப்படையிலோ மக்களிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. திறமையை பரிசோதித்துப் பார்த்து, அதில் அவர் தேர்ச்சி பெற்றால் மட்டும் பரிந்துரை செய்தால் போதும். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கும் அனைவரையும் அழைத்து, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நன்மைகளுக்காகவும் என்னென்ன செயல்திட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து விவாதம் நடத்த ஊடகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதை பலமுறை நான் கூறியுள்ளேன்.
ஊடகங்களால் ஏற்பாடு செய்யப்படும் விவாதத்தில் வெற்றி பெறும் வேட்பாளரை ஊடகத்துறையின் வேட்பாளராக முன்னிறுத்தலாம். அப்படி செய்தால் அது உலக அளவில் முன்மாதிரியாக இருக்கும். அப்படி செய்தால் தமிழகத்திற்கு நல்ல தலைமையும், தமிழ்நாட்டு மக்களுக்கு உலகம் போற்றும் நல்லாட்சியும் கிடைக்கும். என்று அந்த கடிதத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்,