புதுச்சேரி அரசை பின்பற்றி இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை
தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 49.8 சதவீதமாக அதிகரித்து - தேசிய சராசரியான 23.5 சதவீதத்தை விட இரட்டிப்பாகி வரலாறு காணாத வகையில் வானுயரப் பறந்து கொண்டிருக்கிறது என்பது பேரதிர்ச்சியளிக்கிறது. கடந்த டிசம்பர் 2019-லிருந்த வேலைவாய்ப்பின்மை, தற்போது 10 மடங்காக உயர்ந்து, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைத்து - நம்பிக்கையை நாசம் செய்து விட்டது.l
அமைப்புசாரா தொழிலாளர்களில் மட்டும் 83.4 சதவீதம் பேர் தங்களது தினசரி வேலையை இழந்து சோக வளையத்திற்குள் சிக்கியிருக்கிறார்கள். இன்னும் கூட அவர்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் கண்ணுக்குத் தெரியாமல், கதி கலங்கி நிற்கிறார்கள். 'வாழ்க்கைப் பேரிடரை' போக்கவே, 'குடும்பத்திற்கு 5000 ரூபாய் நேரடியாகப் பண உதவி செய்யுங்கள்' என்று திமுக சார்பில் தொடர்ந்து, இந்த கொரோனா கட்டங்களில் பலமுறை ஆக்கபூர்வமான ஆலோசனைகளைச் சொல்லி - அனுதினமும் வலியுறுத்தி வந்தேன்.கிராமப்புற, நகர்ப்புற மக்களை - அவர்களின் மிக மோசமான வாழ்வாதார இழப்பிலிருந்து காப்பாற்றிக் கரை ஏற்ற உதவிக்கரம் நீட்டிடவும் முன்வரவில்லை. மாறாக, 'ஊரடங்கு' பிறப்பித்து இன்றுவரை ஒவ்வொரு நாளும் 'உபத்திரவம்' செய்து வருகிறது.வெளிநாடு சுற்றுலா மற்றும் கொரோனா காலத்தில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன, எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறித்து, தமிழக மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும்; கேட்டுக் கொள்கிறேன்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்தை - இழந்துவிட்ட வேலைவாய்ப்பை மீட்டிட புதுச்சேரி அரசு போல் உடனடியாக இ-பாஸ் நடைமுறையை இன்றே ரத்து செய்திட வேண்டும் என்றும்; ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடியாக 5000 ரூபாய் நிதி அளித்திட வேண்டும் என்றும்; ஸடாலின் வலியுறுத்தியுள்ளார்