பாலகுருசாமிக்கு பொன்முடி பதிலடி

இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியா முழுக்க வேலை செய்ய முடியும் என்பது மிகவும் போலியான காரணம்.என்று அண்ணாபல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமிக்கு  முன்னாள் அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார் 


 


இது குறித்து உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் பொன்முடி அறிக்கை"
முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, தான் ஒரு கல்வியாளர் என்ற நிலை தாண்டி, பழுத்த அரசியல்வாதி போல், தனது இந்தி மொழி மீதான விருப்பத்தை வெளியிட்டு, மத்திய அரசின்  மும்மொழிக் கொள்கைக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துள்ளார். புதிய கல்விக் கொள்கைக்கு 100% பச்சைக் கொடி காட்டியுள்ளார். 
இந்தி மொழி மீது காதல் உள்ளவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த போதே, இந்தியை ஒரு விருப்ப மொழியாக அறிமுகப்படுத்தி இருக்கலாம். அன்று பதவி முக்கியம்; இன்று பதவி பெறுவது முக்கியம்அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, இந்தியை பாடமாகப் படிக்க வைக்க வேண்டும் என்பது அவர்தம் வாதம். அதாவது, தற்போது அரசுப் பள்ளியில் பாகம் ஒன்றில் தமிழும் பாகம் இரண்டில் ஆங்கிலமும் மொழிப் பாடங்களாக அளிக்கப்படுகிறது. பாகம் மூன்று ஒன்றை உருவாக்கி, அதில் இந்தி சமஸ்கிருதம் போன்ற, நான்கு அல்லது ஐந்து மொழிப் பாடங்களை தெரிவுகளாக வைத்து, விருப்பமான மொழியைத் தேர்வு செய்து படிக்க வைக்க வேண்டும் என்கிறார். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது; வெளிநாட்டு வேலைக்கு ஆங்கிலம் பேசுவதும் எழுதுவதும் அவசியம் என்று தற்போது பள்ளி முதல் கல்லூரி வரை மிகுந்த  அக்கறை எடுத்துக் கொண்டு, ஆங்கிலம் பேசவும் எழுதவும் கற்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும், கங்கணம் கட்டிக் கொண்டு பயிற்சிகளை அளித்து வருகின்றன. இந்த நிலையில் இங்கே இந்திமொழி எங்கே தேவைப்படுகிறது?


மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதும்போது, ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதலாம் என்ற விதிமுறை வந்த பிறகு, தற்போது தாய்மொழி தமிழ் மொழியில் எழுதி, சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பெருமளவில் வெற்றி பெறுகின்றனர் தமிழ்நாட்டு மாணவர்கள். இதில்  எங்கே "இந்தி” உதவுகிறது அல்லது இந்திக்கல்வி தேவைப்படுகிறது?மொழி என்பது அறிவு அல்ல. பல மாநிலங்களுக்கு இடையே லாரி  ஓட்டுபவர் சரளமாக பலமொழிகள் பேசுவார். தாய்மொழிக்கல்வி வழியில் பெறும் அறிவே ஒருவரை உயர்த்தும். பணியின் தேவைக்கேற்ப எந்த மொழியையும் எந்தக் காலத்திலும், யாராலும் கற்றுக்கொள்ள முடியும். இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியா முழுக்க வேலை செய்ய முடியும் என்பது மிகவும் போலியான காரணம். என்று அந்த அறிக்கையில் பொன்முடி கூறியுள்ளார்