.ஸ்டாலினுக்கு எந்த தடையும் இல்லை

 இ பாஸ் விவகாரத்தால் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த தடையையும் அரசு பிறப்பிக்கவில்லை என்று  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார் 


சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், இ பாஸ் விவகாரத்தில்  பல தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும்  மாவட்டம் விட்டு மாவட்டம் இடம் பெயர்ந்து செல்வதால் கொரோனா நோய்த்தொற்று பரவக்கூடும் என்ற அச்சத்தை தடுக்கவே இ பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார், இதனால் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு எந்த தடையையும் பிறப்பிக்கவில்லை என்றும்  அவர் வழக்கம் போல் சென்னையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் என்றும் நேற்று கூட சென்னையில் இருந்து நீலகிரியில் கலைஞர் சிலையை காணொளி மூலம் திறந்து வைத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் உதயகுமார், தங்களை தாங்களே முடக்கி கொண்டு காரணகாரியங்களை கற்பித்தால் அது பற்றி அரசு பொறுப்பேற்காது என்றும் கூறினார், 


தொழில்முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி குறித்து பதிலளித்த அமைச்சர், திமுகவும் ஆட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறது ஸ்டாலினும் துணை முதலமைச்சராக பணியாற்றி இருக்கிறார் என்றும்  அவர்களது ஆட்சியில்  போடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்கள் உடனடியாக  அமலாகி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார், 29 மாநிலங்களில் போடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து  வெள்ளை அறிக்கையை வழங்கினால் தாங்களும் வெள்ளை உள்ளத்தோடு வெள்ளை அறிக்கை வழங்குவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார், முதலில் வெள்ளை மனது வேண்டும் என்று  மு.க.ஸ்டாலினை கிண்டலடித்தார்