சிக்கல்  விமான நிலையங்களும்   சவால் பைலட்களும்

இந்தியாவில்  விமான பைலட்டுகளுக்கே  சவால் விடும் வகையிலான  மூன்று மலை பாங்கான டேபிள் டாப் ஓடுபாதை கொண்ட  விமான  நிலையங்கள் உள்ளன, விபத்துக்குள்ளான கேரளாவின்  கோழிக்கோடு, கர்நாடகாவின் மங்களூர் மற்றும் இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மிசோராமின் லெங்ப்பூ தான் அவை.



இந்த விமான  நிலையங்கள் மலை போன்று மணல் நிரப்பி தரையிலிருந்து  மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இதன் காரணமாக ஓடுபாதையின் முடிவில் பள்ளம் போன்ற அமைப்பு இருக்கும் இதனால் விமானங்கள் ஓடுபாதையில் கடைசி வரை சென்றால் இந்த செயற்கை மலையில்  இருந்து விழுந்து விபத்துக்குள்ளாகலாம் என்பது இதை அமைக்கும்போதே ஆட்சியாளர்களுக்கு தெரிந்திருக்கும் ஆனால் அந்த இடத்தில் ஏதோ காரணத்திற்காக இது போன்ற விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டிருக்கும்.


இந்த விமான  நிலையங்களில் விமானத்தை மேல்நோக்கி புறப்பாடு (டேக் ஆப்) மற்றும் தரை இறக்க (லெண்டிங்) செய்வதும் மிகவும் பயிற்சி பெற்ற தலைமை விமான ஓட்டுனராக (கேப்டன்) மட்டுமே இருக்க வேண்டும் என்பது விமான கட்டுப்பாட்டு ஆணையத்தின் விதி.


இந்தியாவின் சிவில் விமான  பாதுகாப்பு ஆலோசனைக் குழு 10 ஆண்டுகளுக்கு முன்பாக கோழிக்கோடு விமான நிலையம்  பெரும் மழை மற்றும் பருவமழை காலங்களில் பாதுகாப்பற்றது என அறிவுறுத்தியபோதும் எப்படி மழை காலங்களில் இந்த விமான  நிலையம் இயங்கிவந்தது என்பது பலர் மனங்களிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. விமானங்கள் தரையிறக்கப்படும்போது இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன,  அவை விமான கருவிகள் பயன்படுத்தி தரையிறங்கும் முறை (Instrument Landing System) மற்றொன்று விமான ஓட்டுநர் தன் திறமையால் தரையிறங்கும் முறை (Visual Approach Landing). கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX-1344 விமான  ஓட்டுநர் தன் திறமையால் தரையிறக்க முயற்சி செய்துள்ளார் என்பது தெளிவாகிறது.


விமானங்களை  தரையிறக்க முடியாத நிலையில் விமான  ஓட்டுனர்கள் அருகில் உள்ள வேறு  விமான  நிலையத்திற்கு விமானத்தை  தரையிறக்குவது வழக்கமான  ஒன்று ஆனால் IX-1344 விமானத்தின்  தலைமை ஓட்டுநர் திரு. தீபக் வசந்த் சாதே ஏன் கடுமையான மழை பெய்துக்கொண்டிருக்கும் போது ஏன் தன் விமானத்தை  கோழிக்கோட்டில் தரையிறக்கினார் என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றது.


மலைப்பாங்கான table top விமான நிலையங்களில் போயிங் 737, ஏர்பஸ் ஏ320 ரக விமானங்கள்  மற்றும் அதை விட சிறிய ரக விமானங்கள்  மட்டுமே இயக்கமுடியும். போயிங் 737 மற்றும் ஏர்பஸ் ஏ320 விமானங்கள்  நவீன கணினிகள் பயன்படுத்தும் விமானங்கள் என்பதால் அவை பெரும்பாலும் விபத்துக்குள்ளாவது கிடையாது ஆனால் இயற்கையை மனிதன் வெல்ல முடியாது என்பதற்கு மங்களூர் மற்றும் கோழிக்கோட்டில் நடந்த வானுர்தி விபத்துகள் ஒரு உதாரணம்.


உலகில் பல்வேறு இடங்களில் இது போன்ற சவாலான விமான நிலையங்கள் உள்ளன, நேபாளத்தில் உள்ள லுக்லா, ஹாங்காங் நகரின் பழைய வானுர்தி நிலையமான கைதாக் அவற்றில் சில.



லுக்லா வானுர்தி நிலையம் இமாலய மலையில் கடல் மடத்திலுருந்து 9,383 அடி உயரத்தில் உள்ள வானுர்தி நிலையமாகும். துரதிர்ஷ்டவசமாக லுக்லாவில் தரையிறங்கும் வானுர்திகளுக்கு, ஓடுபாதை 1,729 அடி நீளத்தில் மிகக் குறைவாக இருக்கும். உலகின் பல சர்வதேச வானுர்தி நிலையங்களில் ஓடுபாதைகள் 10,000 அடிக்கு மேல் நீளமாக இருப்பதால் அந்த விமானநிலையங்களின்   ஓடுபாதையில் தரை இறங்குவது கடினமாகவும் இருக்காது சவாலாகவும் இருக்காது ஆனால் லுக்லா போன்றும் கோழிக்கோடு, மங்களூர், லேய்ப்புங் போன்றும் குறுகிய ஓடுபாதை, இருபக்கமும் மலை, மலைப்பாங்கான விமான  நிலைய அமைப்பு வானுர்தி இயக்கும் ஓட்டுனர்களுக்கு மிகவும் கடினமாகவும் சவாலாகவும் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இருக்காது.



ஹாங்காகின் கைதாக் விமான  நிலையத்தில் விமானத்தை தரையிறக்க வரும்போது (Final Approach) இரு பெரும் வானுயர்ந்த கட்டிடங்களுக்கு இடையில் 40 டிகிரி கோணத்தில் 1,000 அடிக்கும் குறைவான உயரத்தில் பறக்கும்போது குறைவான வேகத்தில் 40 விநாடிகளில் விமானத்தை  திருப்பவேண்டும் தவறினால் விமானம் அந்த இரண்டு கட்டிடங்களுக்கு எதிரில் உள்ள ஒரு மலையில் மோத வேண்டியிருக்கும். அந்த மலையில்  வானுர்தி ஓட்டுனர்களுக்கு அடையாளமாக கருப்பு மற்றும் சிகப்பு நிறத்தில் கட்டங்கள் வரையப்பட்டிருக்கும் அதை  பார்த்தவுடன்  ஓட்டுனர்கள் தங்களது விமானத்தை  மிக வேகமாக 40 டிகிரி கோணத்தில் தரையிறக்க முயற்சி செய்வார்கள். இதை திறமைபடைத்த விமான  ஓட்டுனர்கள் மட்டுமே செய்யமுடியும் என்பதால் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை விமான நிறுவனங்கள் ஹாங்காங் நகருக்கு விமானத்தை  இயக்க மிகவும் பயிற்சிபெற்ற மற்றும் திறமையான ஓட்டுனர்களை மட்டுமே பயன்படுத்தி வந்தது.


இந்த வகையில் ஆபத்தாக விமான  நிலையம் அமைந்து இருப்பதாலும் ஹாங்காங்கிற்கு வரும் சுற்றுலா பயணியர் அதிகரித்ததாலும் ஹாங்காங் அரசு புதிய பாதுகாப்பான விமான  நிலையத்தை அமைத்து கைதாக் வானுர்தி நிலையத்தை மூடியது.


இப்படி விமான  ஓட்டுனர்களின் வாழ்க்கை பல சவால்களையும் கடினங்களையும் கொண்டது என்பது அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கும் விமானத்தை ரசித்து பார்க்கும் மக்களுக்கும் தெரிவதில்லை.


**********************************************