கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் சென்னையில் இன்று மாலை காலமானார், அவருக்கு வயது 70, காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக பணியாற்றிய வசந்தகுமார், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், கடந்த ஆகஸ்ட் 10 ம்தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமாருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது, மிகுந்த கவலைக்கிடமாக இருந்த வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 7 மணிக்கு காலமானார்,மறைந்த வசந்தகுமாருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் தம்பியான வசந்தகுமார் காங்கிரஸ் கட்சியின் வர்த்தக காங்கிரசில் நீண்டகால தலைவராக பணியாற்றினார், நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார், கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கன்னியாகுமரி நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குவித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார், கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியான முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் ஆவார், கொரோனா நோய்த்தொற்று தாண்டவத்திற்கு பலியான முதல் அரசியல் பிரமுகர் , சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக சட்டமன்றஉறுப்பினர் ஜெ.அன்பழகன் ஆவார்,
வசந்தகுமார் மறைவுக்கு தாங்கள் இருவரும் சந்தித்த புகைப்படத்துடன் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்,மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், நடிகர்கள் ரஜினிகாந்த் நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
வசந்தகுமாரின் உடல் சென்னை சத்திய மூர்த்தி பவனின் முகப்பில் நாளை காலை 10 மணிக்கு பொதுமக்கள் மற்றும் காங்கிரசாரின் இறுதி மரியாதைக்காக வைக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்துள்ளார்