இந்தியாவின் கலாசாரம் மற்றும் பரிணாமம் குறித்து அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை கலைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர் .
இது குறித்து திமுக கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
இந்தியாவின் கலாச்சார தோற்றுவாய் பற்றியும், அதன் பரிணாமம் குறித்தும் 12000 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்று ஆய்வுக்குட்படுத்த ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்தார். அந்த 16 பேர் கொண்ட நிபுணர் குழு இல்லை. தென்னிந்தியர்கள் எவரும் இல்லை. வடகிழக்கு இந்தியர்கள் இல்லை. சிறுபான்மையினர் இல்லை. தலித்துகள் இல்லை. பெண்கள் இல்லை.
தென்னிந்திய மொழிகளின், பெருமைமிக்க வரலாற்றையும் மத்திய அரசாலேயே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட, ஆய்வாளர்கள் யாரும் அக் குழுவில் இல்லை. அக் குழுவின் உள்ளடக்கம் பல கேள்விகளை எழுப்புகிறது. மிகச் சிறந்த ஆய்வாளர்களான ஜான் மார்ஷல், சுனித் குமார் சாட்டர்ஜி, ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர். பாலகிருஷ்ணன் போன்றவர்கள் இத் துறைக்கு பெரும் பங்களிப்பை நல்கியுள்ளனர். இந்த நேர்மறையான பங்களிப்புகளையெல்லாம் இக் குழு சிதைத்துவிடுமோ என அஞ்சுகிறோம். இத்தகைய உள்ளடக்கம் கொண்ட இக் குழு அறிவியல் பார்வையோடு ஆய்வு செய்ய இயலாது. மேலும் வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுத்துவிடும் எனக் கருதுகிறோம். இப் பிரச்னையில் தாங்கள் தலையிட்டு, அரசு அமைத்துள்ள இக் குழுவை கலைக்க அறிவுறுத்துமாறு அந்த கடிததத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது