பஸ் ஸ்டாண்டு இங்கே தியேட்டர்கள் எங்கே

..


\


சென்னையிலுள்ள திரையரங்கங்கள் ஒரு காலத்தில் அந்தந்த ஏரியாவின் அடையாளச் சின்னங்களாக கம்பீரமாக காட்சியளித்தன. தற்போது நினைவுச் சின்னங்களாக நமது ஞாபகங்களில் வந்து போகின்றன.. ஆனால் காலப்போக்கில் பல திரையரங்கங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டன ஆமாம் பழமையான திரையரங்குகள் தற்போது திருமண மண்டபங்களாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிப் போய் விட்டன.  சும்மா ஜாலியா பாரிமுனை டூ டோல்கேட் வரை ஒரு ரோடு டிரிப் போகலாமா....என்று வண்டியை  ஸ்டார்ட் செய்தால் முதலில் மினர்வா தியேட்டர் , அடுத்த சில மீ்ட்டரில் செலக்ட்


நெக்ஸ்ட் பிராட்வே பக்கத்திலேயே பிரபாத் முருகன், தங்கசாலை இறக்கத்தில் அங்கே நம்ம கிருஷ்ணா .கிரௌன் கொஞ்சம் எட்டி பார்த்தா பத்மநாபா சரி நாம பிரிட்ஜ் ஏறி இறங்குவோம்.             பல பழமையான தியேட்டர்கள் வகுப்புகளை கட் அடித்து விட்டு பதினாறு வயதினிலே சப்பாணி கமலை பார்த்து  ரசித்தது நினைவில் இருக்கிறது.சக நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ரஜினிக்கும் கமலுக்கும் மன்றம் வைத்து பேனர் கட்டிய காட்சிகள் தான் வந்து போகின்றன.அந்த தியேட்டர்களைத் தான் காண முடியவில்லை. பல திரையரங்கங்கள் வெறும் புரஜெக்டர் வெள்ளித்திரைகள், நாற்காலிகள் கொண்டவை அல்ல: அவற்றை வெறும் தியேட்டர்களாக பார்க்க முடியவில்லை. அதற்கும் வரலாறு உண்டு .இப்போது பிராட்வே என்றழைக்கப்படும் திரையரங்கில் தான், தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ்  படம் ஒரு வருடம் வரை வெற்றிகரமாக ஓடியது: ஆனால் அந்த தியேட்டரில் எந்த படமும் ஓடாமல் பல வருடங்களாக தியேட்டரே ஒரு காட்சி பொருளாக இருக்கும் அவலத்தை அந்த காலத்தவர் பார்த்தால் கண்களில் கண்ணீ்ர் தான் பெருக்கெடுக்கும் 


பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சாந்தி தியேட்டர் அண்ணாசாலையில் பிரபலம்,  அதன் அருகாமையில் உள்ள கேசினோ .கெயிட்டி, வெலிங்டன்.அலங்கார், ஆனந்த், சபையர் இவை எல்லாமே சென்னையில் நமது பெரிசுகள் பார்த்து பார்த்து சலித்த தியேட்டர்கள், எல்ஐசி அருகே இருந்த அலங்கார் இப்போது ஐடி கம்பெனிகளின் காம்ப்ளக்ஸ் ஆகி விட்டது, மற்ற தியேட்டர்கள் பற்றி சொல்லத் தேவையில்லை. நடுத்தர வயதுக்காரர்களுக்கு தெரிந்த இந்த தியேட்டர்கள், பல இன்று வானுயர்ந்த கட்டிடங்களாகி விட்டன, ஆனால் அந்த இடத்தில் எந்த தியேட்டரும் இல்லை: பலருக்கும் பழைய ஞாபகங்களை திரும்ப கொண்டு வரும்  நினைவு சின்னங்களாக தான்  தரைமட்டமான  தியேட்டர்கள்  காட்சியளிக்கின்றன, சென்னை சினிமா தியேட்டர்கள் குறி்த்து யாராவது புகைப்பட கண்காட்சி நடத்தினால் தலைநகரத்தின் வரலாற்றில் சினிமா எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றது என்று தெரியவரும், சினிமாவை வளர்த்தவை சென்னை மாநகர திரையரங்கங்கள் தான் என்பது இளையதலைமுறைக்கு தெரியவரும்.


இந்திரனும்  வந்ததும் சந்திரன்  வந்ததும் இந்த சினிமா தான். நம்ம எம்.ஜி.ஆர் வந்ததும் என்.டி.ஆர் வந்ததும் இந்த சினிமா தான். என்று இளையராஜா பாடிய  பாடலைக் கேட்டால் புரியும் சினிமா சென்னை மக்கள் வாழ்க்கையோடு எப்படி ஒன்றிப் போனது என்பது   தெரிய வரும். நம் ரசனையை வளர்த்த கலை படைப்புகளை மீண்டும் தொலைக்காட்சியில் பார்க்கலாம். சினிமா தியேட்டரில் அமர்ந்து ஆரவாரமாய் கைதட்டி விசிலடித்து  பார்த்து மகிழ்ந்த அனுபவம் எங்கும் கிடைக்காது.                 இனி வரும் காலங்களில் கண்டக்டர் தண்டையார்பேட்டை அகஸ்தியா இறங்கு என்று விசிலடித்து இறக்கும் போது எங்கே இங்கே  இருந்த தியேட்டர் என கலையாத நினைவுகளுடன் தியேட்டரை  தேடும் சினிமா ரசிகன் சென்னையின் அனைத்து ஏரியாக்களிலும் தென்படுவான்.