பல்கலைக்கழகத்திற்கும் மாணவர்களுக்கும் துரோகம் செய்கிறார் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீது ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்புகழ் தகுதி (Institute of Eminence) பெற்ற நிறுவனமாக அறிவிக்க வேண்டும்அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழதகுதி பெறப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. இன்னும் கேட்டால் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இந்த தகுதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று முதன்முதலில் வலியுறுத்தியது நான் தான். ஆனால், அண்ணா பல்கலைக்கு இந்தத் தகுதியை பெறுவதில் இரு சிக்கல்கள் உள்ளன.
முதலாவதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு 5 ஆண்டுகளில் ரூ.1000 கோடி வழங்கும் நிலையில், தமிழக அரசு ரூ.1750 கோடி தர வேண்டும். மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இந்தத் தகுதியை வழங்குவதற்காக முதலீடு செய்யப்பட வேண்டிய முழுத் தொகையையும் மத்திய அரசே வழங்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் முழுத் தொகையையும் மத்திய அரசே வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கோருகிறது. ஆனால், அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இரண்டாவதாக, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி வழங்கப் பட்டாலும் கூட, 69% இட ஒதுக்கீடு தொடரும் என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது. ஆனால், இதை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளும் மத்திய அரசு, எழுத்துப்பூர்வமாக எந்த உத்தரவாதமும் அளிக்க தொடர்ந்து மறுத்து வருகிறது.
இத்தகைய சூழலில் சுரப்பா தன்னிச்சையாக மத்திய அரசை அணுகியது பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்கும் செய்த துரோகம் ஆகும். இட ஒதுக்கீட்டு சிக்கலுக்கு தீர்வு காணாமல் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி பெறுவதால் எந்த பயனும் கிடைக்காது. அண்ணா பல்கலை. உயர் புகழ் கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டாலும் கூட, மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையும், மாணவர் சேர்க்கைக் கொள்கையும் கடைபிடிக்கப்பட்டால் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கும் எந்தப் பயனும் கிடைக்காது. வெளிமாநில மாணவர்களும், உயர்வகுப்பினரும் மட்டும் தான் மட்டும் தான் பயனடைவர். அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகமே 5 ஆண்டுகளில் ரூ.1570 கோடி நிதியை திரட்டுவதாக வைத்துக் கொண்டாலும் அதற்காக கல்விக்கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை கடுமையாக உயர்த்த வேண்டியிருக்கும். அதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, இது ஏற்கத்தக்க யோசனை அல்ல.
இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் துணை வேந்தர் சுரப்பா தன்னிச்சையாக செயல்படுகிறார் என்றால், அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட வேண்டும் என்று நினைப்பவர்களின் கைப்பாவையாக செயல்படுகிறாரோ? என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. மேலும், துணைவேந்தர் என்பவர் பல்கலைக்கழகத்தை 3 ஆண்டுகளுக்கு வழிநடத்துவதற்காக நியமிக்கப்பட்டவர் மட்டுமே. அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவுகளை துணைவேந்தர் எடுக்க முடியாது. இந்த விஷயத்தில் சுரப்பாவின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். 69% இட ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை முறை, மாநில அரசின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்புகழ் தகுதி பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்