எனக்கு ஆறுவருசம் தேர்தல் தடையா எந்நாளும் நிறைவேறவே முடியாத அரசியல் பேராசை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளார்
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
அதிகார துஷ்பிரயோகம் செய்து, பெருமளவு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது தொடர்பான ஊழல் வழக்கிற்காக, உயர்நீதிமன்றத்தால் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியாவின் ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் வழக்கு வேறு விதமாக அமைந்தால் ஸ்டாலின் ஆறு வருடம் தேர்தலில் நிற்க முடியாது” என்று பேசி, எந்நாளும் நிறைவேறவே முடியாத தன்னுடைய அரசியல் பேராசையை வெளிப்படுத்தி இருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதிமன்ற அவமதிப்பு
கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கைப் பொறுத்தவரை, ஏற்கனவே உயர்நீதிமன்றம் 549 பக்கம் விரிவாகத் தீர்ப்பளித்து - நான் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று கூறிவிட்டது. என் மீது, தோற்றுப் போன வேட்பாளர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று, ஒவ்வொரு குற்றச்சாட்டு வாரியாக விசாரித்து - வாதப் பிரதி வாதங்களைக் கேட்டு விரிவாகத் தீர்ப்பளித்து விட்டது. அந்தத் தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டைச் சுட்டிக்காட்டி, ஒரு முதலமைச்சர், உச்சநீதிமன்றத்திற்கே கட்டளை பிறப்பிக்கும் வகையில், அதுவும் அரசு விழாவில் நின்று கொண்டு அறைகூவல் விடுத்துப் பேசுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்
நானும் ஜெயிலுக்கு போறேன்
வரப் போகின்ற தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாது. இரு தலைமை என்று ஆட்சியில் அருவருப்பாக அடித்துக் கொண்டது போதும் என்று - முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதிலும் அடித்துக் கொண்டதால் - அ.தி.மு.க.விற்குத் தலைமை யார் என்றே தெரியாமல் அ.தி.மு.க. தொண்டர்களே, திக்குத் தெரியாத காட்டில் குழம்பிப் போய் நிற்கிறார்கள். இந்தக் குழப்பத்தைப் போக்க - “நானும் ஜெயிலுக்குப் போறேன்” என்ற ‘காமெடி’ போல், “நானும் முதலமைச்சர் வேட்பாளர்தான்” என்று மக்களை நம்ப வைக்கலாம் என்ற நப்பாசையில் - உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கினை மேற்கோள் காட்டி, முதலமைச்சர் பழனிசாமி பேசி வருவது, “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற விரக்தியில் இருப்பதைக் காட்டுகிறது.என்று அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்