கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராவாரா?
தேர்தல் என்றாலே இழுபறிக்கு பஞ்சம் இருக்காது என்பதை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிரூபித்துவிட்டது. இந்த இழுபறியும் ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது ஒன்றும் அமெரிக்காவுக்கு புதிதில்லை. 2000 ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் புளோரிடா மாகாண வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தீர்வுகாண குடியரசு கட்சி வேட்பாளர் ஜார்ஜ் வாக்கர் புஷும் ஜனநாயக கட்சி வேட்பாளர் அல்கோரும் அமெரிக்க உச்சநீதிமன்றத்தினை நாடி அந்த வழக்கின் தீர்ப்பு ஜார்ஜ் புஷிற்கு அமெரிக்க அதிபர் பதவியினை உறுதி செய்தது என்பது வரலாறு.
இந்த ஆண்டின் தேர்தலிலும் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் விஸ்கான்சின் மற்றும் மிச்சிகன் மாகாண வாக்குகளில் தபால் வாக்குகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதன்காரணமாக வாக்கு எண்ணிக்கையை அந்த மாகாணங்களில் நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஏற்கனவே டிரம்ப் தன்னுடைய ட்விட்டரில் அமெரிக்க அதிகாரிகள் ஜோ பிடெனுக்கு ஆதரவாக பதிந்துள்ள வாக்குகளை தேடி தேடி எண்ணுகிறார்கள் என்று கூறி ஒரு சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறார்.
பொதுவாக ஜனநாயக கட்சி இந்தியாவிற்கு சாதமாக செயல்படும் என்றும்மற்ற நாடுகளுடன் சுமுக உறவை வைத்துக்கொள்ள விரும்பும் என்று கூறப்படுகிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடென் இந்த தேர்தலில் வென்றால் அவரின் துணை அதிபராக தமிழ்நாட்டின் மகள் என்று போற்றப்படும் கமலா ஹாரிஸ் துணை அதிபராக பொறுப்பேற்பார் அவர் துணை அதிபராக வேண்டும் என்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் சிறப்பு வழிபாடுகளும் அன்னதானங்களும் நடைபெற்றிருக்கின்றன.கூடவே சிங்கப்பெண்ணே என்று நம்ம மார்க்ப்படி போற்றி புகழ்பாடி பேனர்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. கமலா துணை அதிபரானால் இந்தியாவிற்கு சாதகமாக செயல்படுவார் அமெரிக்காவில் இருந்து முதலீடுகளை தமிழகத்திற்கு குறிப்பாக திருவாரூரில் குவிப்பார் என்பது சொந்த கிராமத்தின் நம்பிக்கை.ஆனால் அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் பொருளாதார நிலைமையில் இந்தியாவிற்கு எந்த அளவிற்கு சாதகமாக செயல்பட முடியும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.