மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர், இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தத்திற்கு இடது சாரி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
பாஜகவின் வேல்யாத்திரை, தமிழகத்தில் நிவர் புயல் உள்ளிட்ட பரபரப்புகளுக்கு இடையில் டெல்லியில் விவசாயிகள் எழுச்சி இந்தியாவையே அதிர வைத்தது. வெள்ளிக்கிழமை தலைநகரத்தை நோக்கி அரியானா, பஞ்சாப் மற்றும் இந்தியாவின் இதர மாநிலங்களில் விவசாயிகள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுத்துறை நிறுவனங்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்கக்கூடாது, பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும், விவசாயிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும், கட்டாய ஓய்வு வழங்கும் சுற்றறிக்கையை கைவிட வேண்டும் என்று சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் திரண்டனர். நேற்று விடிய விடிய தலைநகரில் குவிந்த விவசாயிகள் அங்காங்கே படுத்து உறங்கினர். இதன் காரணமாக தலைநகரத்தில் இருந்து பேருந்துகள் கடுமையாக கண்காணிக்கப்பட்டன, விவசாயிகள் உள்ளே நுழைய முடியாத தடுக்க ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விவசாயிகள் டெல்லி வீதிகளில் நடமாட முடியாதபடி மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன, பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது, ஆளில்லா விமானங்களும் தீவிர கண்காணிப்பில் இறங்கினர், எனினும் போலீசார் கண்களில் மண்ணை தூவி விவசாயிகள் குவிந்தபடி இருந்தனர்.
போலீசார் நிலைமையை சமாளிக்க முடியாததால் டெல்லி வீதிகளில் ராணுவம் நுழைந்தது. தலைநகரில் உள்ள இந்தியா கேட், ஜந்தர் மந்திர், பாராளுமன்ற வளாகம் உள்ள பகுதிகளில் விவசாயிகள் நுழைய முடியாதபடி தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டன, அதையெல்லாம் துாக்கியெறியவிட்டு விவசாயிகள்முன்னேறினர், இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த திடீர் முற்றுகையை தடுக்க முடியாமல் டெல்லி போலீசார் திணறினர்.
ஒரு கட்டத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்ததால் விவசாயிகள் சிதறினர், இதைத்தொடர்ந்து கண்ணீா் புகை குண்டு மழை பொழியப்பட்டது, டெல்லி போலீசாரின் இந்த அடக்குமுறையால் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது, டெல்லியில் போலீசார் நடத்திய காட்டுத்தர்பாருக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுசெயலாளர் சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லி வரலாற்றில் பல ஆண்டுகளுக்கு பின்னர் விவசாயிகள் குவிந்ததால் ஏற்பட்ட எழுச்சியை கண்டு பாஜகவினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நன்றி: என்.டி.டிவி