இயற்கையை ரசிக்கிறோம் என்ற பெயரில் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏரிகளுக்கும் குளங்களுக்கும் அருகில் சென்று செல்பி எடுக்க வேண்டாம் என்றும் தேவையில்லாமல் ஆபத்தை தேடி கொள்ள வேண்டாம் என்றும் இளைஞர்களுக்கு அமைச்சர் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்
வடகிழக்கு பருவமழைக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் , அவசரகால வெள்ளத்தடுப்பு உதவிக்கான தொலை பேசி எண்கள் குறித்த கையேட்டினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சென்னையில் இன்று வெளியிட்டார் .அப்போது அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்
தமிழ்நாட்டிற்கு, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தான் அதிகளவிலான மழை பொழிவு கிடைக்கிறது, கடந்த அக்டோபர் மாதம் 28 ம்தேதி தொடங்கியது..தமிழகத்தில் மழைவெள்ளத்தால் மாநிலத்தில் மொத்தம் 4133 பகுதிகள் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன. மிகவும் அதிக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் - 321, அதிக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் - 797, மிதமாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் - 1096, குறைவாக பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் - 1919. என்று அரசு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாதிப்பிற்குள்ளாகும் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளுக்கு முறையே குறுவட்ட மற்றும் வார்டு அளவில், பாதிப்பின் தன்மை குறித்த ஆய்வு, பேரிடர் காலத்தில் காத்துக் கொள்ள வெளியேறும் வழி மற்றும் நிவாரண மையங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய வரைபடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.. பேரிடர் காலங்களில் உடனடியாக செயலாற்றிட 14 ஆயிரத்து 232 பெண்கள் உள்ளிட்ட 43,409 முதல் நிலை மீட்பாளர்கள் தயாராக உள்ளனர் இவர்களோடு பாம்பு பிடிக்கும் திறன் உள்ளவர்களையும், நீரில் மூழ்கினால் காப்பாற்ற நீச்சல் வீரர்கள் கண்டறிந்து தயார் நிலையில் உள்ளனர்.அவசர காலங்களில் தகவல் தொடர்புக்காக மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1070) மற்றும் மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையம் (1077), tnsmart செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழைக்காலத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏரி குளங்கள் மற்றும் கண்மாய்கள் இருக்கும் பகுதிகளி்ல் பொதுமக்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது, ,எனவே நீர் நிலைகள் இருக்கும் பகுதிகளில் மட்டுமல்லாமல் நீர் தேங்கும் பகுதிகளுக்கும் செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம், இளைஞர்களுக்கு அன்பான வேண்டுகோள் . இயற்கையை ரசிக்கிறோம் என்று பெயரால் ஏரிகளுக்கும் குளங்களுக்கும் சென்று உயிரை பணயம் வைக்க வேண்டாம். செல்பி எடுத்து உயிருக்கு ஆபத்தை விளைவித்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் மேலும் மின்னல் படும் இடத்திற்கு செல்ல வேண்டாம். கட்டிடங்களின் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்ய வேண்டும். இந்திய வானிலை ஆய்வு அறிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியை முழுக்க பொதுப்பணித்துறை கண்காணித்து வருகிறது, எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்,